திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.