திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் போது மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழு, மலையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக தலைமை செயலாளர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. அறிக்கையின் அடிப்படையில் அதிகமான மனிதர்களை மலை மீது ஏற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என தெரிவித்து உள்ளார்.