அதானி விவகாரம் தொடர்பாக பா.ம.க. எழுப்பும் கேள்வி மிகவும் தெளிவானது. “அதானி குழுமம் தயாரிக்கும் சூரியஒளி மின்சாரத்தை, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகம் வாங்கி, அதை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மின்வாரியங்களுக்கு விற்பனை செய்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடம் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஒரு யூனிட் ரூ.2.61 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், வெளிச்சந்தை விலையில் இதைவிட குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் நிலையில், சூரியஒளி மின்உற்பத்திக் கழகம் அதிக விலை நிர்ணயம் செய்திருப்பதால், அதை வாங்க மின்வாரியங்கள் தயங்கியுள்ளன. இத்தகைய சூழலில், அதானி குழும நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களின் அதிகாரிகளைச் சந்தித்து, ஊக்குவிப்பு அளித்ததாகவும், அதன்பின் அந்த மின்வாரியங்கள் முன்வந்து ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், இந்தக் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பியுள்ள வினா ஆகும்”.