நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாக சௌசௌ உள்ளது. இது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக்காயை மழைக்காலத்தில் தொற்றுகளை அகற்றுவதற்காக பெங்காலிகள் சாப்பிடுகிறார்கள். இதில் உள்ள தோல் நீக்கப்பட்டு காய் மட்டும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதை சாம்பார், பொரியல், கூட்டு, பருப்பு கூட்டு அல்லது சட்னி என செய்து பல்வேறு வகைகளில் சாப்பிடுகிறார்கள். இந்தக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சௌசௌவில் கலோரிகள் குறைவு, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், வைட்டமின் சி, கே, பி6, பி9 ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு மற்றும் சோடியம் இரண்டும் இல்லாததால், இந்தக்காய் உடல் எடை குறைப்பவர்களின் நண்பனாக உள்ளது.